

ராய்ப்பூர்,
நாடு முழுவதும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 37,379 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3,49,60,261 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் சத்தீஸ்கர் மாநிலத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் விகிதம் 4 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய தேவைகளை தவிர பிற சேவைகளுக்கு அனுமதி கிடையாது. அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், நீச்சல் குளங்கள், மால்கள், திரையரங்குகள், திருமண அரண்மனைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், அரங்கங்கள் இயங்க அனுமதியில்லை.
இதனை சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கொரோனா கட்டுப்பாடுகள் கட்டாயம் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் விகிதம் 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பார்கள், திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், ஸ்பாக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.