ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்- ப.சிதம்பரம்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்- ப.சிதம்பரம்
Published on

கொல்கத்தா,

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

நமது நாட்டில் ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன்தினம் ரூ.79.99 ஆக இருந்தது. நேற்று இது ரூ.79.91 ஆக இருந்தது.

இதற்கான காரண காரியங்கள் பற்றி விளக்கிய அவர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை...

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (ஏற்றுமதிக்காக வருகிற பணத்துக்கும், இறக்குமதிக்காக செலவழித்த பணத்துக்கும் இடையே உள்ள பற்றாக்குறை), விலைவாசி உயர்வு போன்ற பல காரணிகளால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு ஏற்றுமதி வீழ்ச்சி, அதிக பணவீக்க விகிதம், வெளிநாட்டுக்கு முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவையும் காரணிகள்தான்.

நாம் மாற்று விகிதத்தை 'விலை' யாகவே பார்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி நிர்வகிக்க வேண்டிய 'மும்மூர்த்திகளில்' இதுவும் ஒன்று. அடிப்படைகள் மேம்படும் போதுதான் ரூபாயின் மதிப்பு உயரும்.

வேலைவாய்ப்பு பிரச்சினை

பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை என அறிவித்து இருப்பது நாட்டின் வேலைவாய்ப்பு நெருக்கடி குறைவதற்கு உதவாது.

மத்திய அரசில் மட்டுமே 8 லட்சம் பணியிடங்கள் காலி என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக சொல்லி இருக்கிறார்கள். 8 லட்சம் காலியிடங்களை கழித்து விட்டால் எஞ்சி இருப்பது 2 லட்சத்துக்கும் குறைவானது. ஆனால் இது 18 மாதங்களுக்கு முந்தைய நிலவரம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், மாநிலங்களவைக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் 2020 மார்ச் 1 நிலவரப்படி மத்திய அரசு துறைகளில் 8 லட்சத்து 72 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

'அக்னிபத்' திட்டம்

இயல்பில் தற்காலிக பணி என்றாலும், பணிவிலகல் பலன்கள் இல்லை என்கிறபோதும், மத்திய அரசின் புதிய 'அக்னிபத்' திட்டத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அது வேலைவாய்ப்பு நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்திய விமானப்படையில் 3 ஆயிரம் அக்னிவீரர் பணியிடங்களுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

சமையல் கியாஸ் விலை உயர்வு

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு பற்றி கேட்கிறீர்கள். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் சாதாரண மக்களைப் பற்றி அரசு கவலைப்படுவதே இல்லை.

மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அரசிடமோ இரக்கமே இல்லை. மக்களின் சுமையைக் குறைத்து, உதவிட வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஆனால் அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின், கியாஸ் சந்தையிடும் நிறுவனங்களின் இருப்புச்சீட்டு (லாப-நஷ்ட கணக்கு சீட்டு) பற்றித்தான் அதிகமாக கவலைப்படுகிறது.

ஆனால் அவை திடீர் லாபம் சம்பாதிக்கின்றன. அதில் ஒரு பகுதியை விலை குறைப்பு மூலம் மக்களுக்கு கொண்டு போய்ச்சேர்ப்பதற்கு பதிலாக, அரசு திடீர் லாபங்களுக்கு வரி விதித்து, தான் கொழிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com