தலைமை தேர்தல் கமிஷனர் நியமன விதிமுறைகளை தகவல் ஆணையர் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

தலைமை தேர்தல் கமிஷனர் நியமனத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகளை தலைமை தகவல் ஆணையர் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
தலைமை தேர்தல் கமிஷனர் நியமன விதிமுறைகளை தகவல் ஆணையர் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குடிமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆணையங்களில் ஏராளமான தகவல் கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப உத்தரவிடக்கோரியும் தகவல் உரிமை ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் ஏராளமான பணியிடம் காலியாக இருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், இந்த பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் தகவல் ஆணையர் நியமனத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை நீதிபதிகள் வழங்கினர். குறிப்பாக, தலைமை தகவல் ஆணையர் பதவி மிகவும் உயர்ந்த பதவி என்று கூறிய நீதிபதிகள், எனவே தலைமை தேர்தல் கமிஷனர் நியமனத்தில் பின்பற்றும் நடைமுறைகளை தலைமை தகவல் ஆணையர் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல அதிகாரிகள் மட்டுமின்றி, பிற துறைகளை சேர்ந்த வல்லுனர்களையும் தலைமை தகவல் கமிஷனர் பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். முன்னதாக தகவல் கமிஷனர்களாக வெறும் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளை மட்டுமே நியமிப்பது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com