குடிபோதையில் அவைக்கு வந்த முதல்-மந்திரி பகவந்த் மான்...? எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு, வெளிநடப்பு

சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
குடிபோதையில் அவைக்கு வந்த முதல்-மந்திரி பகவந்த் மான்...? எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு, வெளிநடப்பு
Published on

சண்டிகார்

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், முதல்-மந்திரி பகவந்த் மான் மது குடித்து விட்டு, அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளன.

இதுதொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதனை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுக்பால் சிங் கைரா வலியுறுத்தியதுடன், எங்களுக்கும் இந்த சோதனையை நடத்த வேண்டும் என்றும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றும் கூறினார். முதல்-மந்திரிக்கு எதிராக, கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

அவையின் எதிர்க்கட்சி தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா கூறும்போது, முதல்-மந்திரி குடிபோதையில் இருக்கும்போது, நாங்கள் அவைக்கு வருகை தந்து என்ன செய்து விட முடியும்? மாநில தலைவர் முற்றிலும் மயக்கத்தில் இருக்கும்போது, அவையை நடத்துவதன் நோக்கம் என்ன? அதனால், ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்.

இன்று தொழிலாளர் தினத்தில் முதல்-மந்திரி குடிபோதையில் அவைக்கு வந்திருப்பது பெரிய வெட்கக்கேடு என ஷிரோமணி அகாலி தளம் கட்சி தெரிவித்து உள்ளது.

பா.ஜ.க.வின் சுனில் ஜாக்கரும் கூட, சுவாச பகுப்பாய்வு பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அப்போது பலரின் முகமூடி களையப்படும் என்று கூறினார். இதுதொடர்பாக முறைப்படி சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com