புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்-அமைச்சர் ரங்கசாமி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த 10-ந் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் புதுவை பட்ஜெட் ரூ.10,700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம்.

இதனையடுத்து நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் சட்டசபையில் உரையாற்றிய அவர், "புதுச்சேரியில் தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். தனியார் பங்களிப்புடன் மீண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும். புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும்.

காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ரூ.80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும். கல்வித்துறையுடன் இணைந்துள்ள விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும். இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சட்ட பல்கலைக்கு அடிக்கல் நாட்டி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்" என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

முன்னதாக சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரலையாக பார்க்கும் வகையில் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி சமூக ஊடகங்களான முகநூல், டுவிட்டர் மற்றும் யூடியூப் மூலம் காலை 9.45 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com