

முதல்-அமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் நேற்று இரவு தங்கிய விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார். கோவிலில் பிற்பகல் 3 மணியளவில் சாமி தரிசனம் செய்தார். சுமார் அரை மணி நேரம் சாமி தரிசனம் செய்த விஜய், கோவிலுக்கு 1.5 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளையும் காணிக்கையாக அளித்தார்.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் முடிந்ததும் முதல்-அமைச்சர் விஜய் காரில் மங்களூரு விமான நிலையம் புறப்பட்டார். தனது காரில் ஏறியதும், டிரைவரிடம் காரை தானே ஓட்டவா? என்று கேட்டுவிட்டு உடனடியாக டிரைவர் இருக்கைக்கு மாறினார். கொல்லூர் கோவிலில் இருந்து காரை முதல் அமைச்சரே காரை ஒட்டி செல்கிறார். முதல் அமைச்சரே காரை ஒட்டி செல்வதை அங்கிருந்த பக்தர்களும் அதிகாரிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முதல் அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளதால், பாதுகாப்பு கன்வாய் வாகனங்களும் உடன் சென்றன முதல் அமைச்சர் விஜய் வருகை காரணமாக உடுப்பி மாவட்ட போலீசார், மூகாம்பிகை கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
முதல்-அமைச்சர் விஜய் பயணம் செய்யும் பாதை, மூகாம்பிகை வனப்பகுதியாகும். சவுபர்ணிகா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் நபர்களை கண்காணிக்கும்படி, வனத்துறை ஊழியர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து, விஜய் பயணம் செய்யும் விமான நிலையம், கோவில் வளாகம் மற்றும் பயண பாதைகளில் வாகன சோதனையும் அதிகமாக இருந்தது. விஜய்யை பார்ப்பதற்கு பல்வேறு இடங்களில் மக்கள் பெருமளவில் திரண்டு இருந்தனர்.