பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாலை வரை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

முதல்-அமைச்சர் விஜய்

இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார். இது முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு அவரது 2-வது டெல்லி பயணம் ஆகும். அவர் விமான நிலையத்தில் இருந்து மதியம் 1 மணி அளவில் தமிழக அரசு இல்லம் வந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையர் ஜெயா, உதவி ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

தலைவர்கள் சந்திப்பு

பின்னர் மாலை 4 மணி அளவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி இல்லத்துக்கு சென்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.இதன்பிறகு மாலை 6.30 மணி அளவில் சோனியா காந்தி இல்லத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். அங்கு சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் இரவு 7.30 மணி அளவில் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு ஓய்வெடுக்க திரும்பினார்.

நிதி ஆயோக் கூட்டம்

இந்த சூழலில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com