விமான நிலையம் வரை காரை ஓட்டி வந்த முதல்-அமைச்சர் விஜய் - மங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டார்

கொல்லூர் கோவிலில் இருந்து காரை முதல்-அமைச்சர் விஜய் ஒட்டிச் சென்றார்.
விமான நிலையம் வரை காரை ஓட்டி வந்த முதல்-அமைச்சர் விஜய் - மங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டார்
Published on

பெங்களூரு,

முதல்-அமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் நேற்று இரவு தங்கிய விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார். கோவிலில் பிற்பகல் 3 மணியளவில் சாமி தரிசனம் செய்தார். சுமார் அரை மணி நேரம் சாமி தரிசனம் செய்த விஜய், கோவிலுக்கு 1.5 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளையும் காணிக்கையாக அளித்தார்.

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் முடிந்ததும் முதல்-அமைச்சர் விஜய் காரில் மங்களூரு விமான நிலையம் புறப்பட்டார். தனது காரில் ஏறியதும், டிரைவரிடம் காரை தானே ஓட்டவா? என்று கேட்டுவிட்டு உடனடியாக டிரைவர் இருக்கைக்கு மாறினார். கொல்லூர் கோவிலில் இருந்து காரை முதல்-அமைச்சரே ஒட்டிச் சென்றார்.

தொடர்ந்து மங்களூரு விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வாகனங்களுடன் முதல்-அமைச்சரின் கார் வந்து சேர்ந்தது. விமான நிலையம் வரை முதல்-அமைச்சர் விஜய்யே காரை ஓட்டி வந்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய் மங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com