

சம்பல்,
நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது உத்தரப் பிரதேசத்தில் பள்ளி முகப்பு இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
சம்பல் தாலுகாவில் உள்ள மடலா பதேபூர் கிராமத்தில் அமைந்துள்ள அல்-ஹசன் பொதுப் பள்ளியில் (Al-Hasan Public School) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு இன்று காலை வேளையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, கொடியேற்றும் நிகழ்ச்சி நிறைவடைந்து குழந்தைகள் கலைநிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக அருகிலுள்ள வீடுகளை சேர்ந்த குழந்தைகள் பள்ளியின் பிரதான நுழைவாயிலுக்கு மேலே இருந்த முகப்புப் பகுதியில் ஏறினர்.
அதிகப்படியான எடையைத் தாங்க முடியாமல் அந்த சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் நயீம் என்பவரின் மகன் நிஜாம் (8) என்ற சிறுவன் உயிரிழந்தான். அதேவேளையில் சைப் அலி (11) மற்றும் ஷைதானா (10) ஆகிய சிறுவர்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.