குதியோட்டம் சடங்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப்பதிவு

குதியோட்டம் சடங்கு தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து உள்ளது. #Kuthiyottam #ChildRightsCommission
குதியோட்டம் சடங்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப்பதிவு
Published on

திருவனந்தபுரம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது பின்பற்றப்படும் குதியோட்டம் சடங்கிற்கு எதிராக கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது, உலக சாதனையாகி 'கின்னஸ்' புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது.

ஆண்டுதோறும் இந்தக் கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய விழாவான பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது. பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவிலில் குதியோட்டம் சடங்கு செய்வது வழக்கம். குழந்தைகளின் கைகளுக்குக் கீழ்பகுதியில் சதையை இரும்புக் கம்பியால் குத்தி, அதிலிருந்து நூலை இழுத்துக் கட்டும் சடங்கு அங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த சடங்குகள் செய்யப்படும்.

குழந்தைகளை காயப்படுத்தும் இந்த விநோதமான சடங்கு தேவைதானா என்று சிறைத்துறை டிஜிபியாக உள்ள ஸ்ரீலேகா என்பவர் தனது பிளாகில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பதிவை போட்டார். இதனால் பெரும் விவாதம் ஏற்பட்டது.

நம்பிக்கை என்ற பெயரில் நடைபெறும் குற்றத்தை தவிர்க்க வேண்டிய நேரமிது என்று தலைப்பிட்டு ஸ்ரீலேகா இந்த பதிவை போட்டுள்ளார். சபரிமலைக்குள் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள், ஆனால் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் அனைத்து வயது ஆண்களையும் பார்க்க முடிகிறது.

குதியோட்டம் சடங்கு என்ற பெயரில் குழந்தைகளுக்கு ஏன் தண்டனை. இது சிறுவர்களுக்கான சிறை என்று சொல்லலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொடூரமான சடங்கை தடை செய்ய வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீலோ கூறியுள்ளார்.

ஸ்ரீலேகாவின் இந்த கருத்தை கோவில் நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். மூதாதையர்கள் காலத்தில் இருந்தே இந்த சடங்கு பின்பற்றப்படுவதாகவும், இதன் உண்மைத் தன்மை தெரியாமல் அந்த அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், கோவில் செயலாளர் நாயர் கூறியுள்ளார்.

எனினும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் குதியோட்டம் சடங்கில் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் அரங்கேறுகின்றனவா? என்பதை கண்காணிக்க குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com