சிறு வயது ஞாபகம்; கிரிக்கெட் மட்டையால் தாத்தாவை அடித்து கொன்ற கல்லூரி மாணவி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அறைக்குள் சென்று, தூங்கி கொண்டிருந்த தாத்தாவின் முகம், உடல் என மட்டையால் ஏழெட்டு முறை கடுமையாக தாக்கினார்.
சிறு வயது ஞாபகம்; கிரிக்கெட் மட்டையால் தாத்தாவை அடித்து கொன்ற கல்லூரி மாணவி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Published on: 

இந்தூர்

கிரிக்கெட் மட்டையால் தாத்தாவை கல்லூரி மாணவி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் கல்லூரி மாணவி சம்பவத்தன்று இரவில் காலதாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். மாணவியின் பாதுகாப்பை பற்றி கவலை கொண்டு, பெற்றோர் கேள்வி கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, மாணவி கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு இரவு என்றும் பாராமல், இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்று கதவை தட்டியதும் பாட்டி திறந்து, பேத்தியை வரவேற்றார்.

பாட்டி அலறல்

ஆனால், கோபத்தில் இருந்த அந்த மாணவி நேராக அறைக்குள் சென்று, தூங்கி கொண்டிருந்த தாத்தாவின் முகம், உடல் என மட்டையால் ஏழெட்டு முறை கடுமையாக தாக்கினார். இதனை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்த பாட்டி அலறி, கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தாத்தாவை மீட்டு அரபிந்தோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கூடுதல் காவல் ஆணையாளர் அசோக் சிங் ஜதோன் கூறும்போது, இரவில் காலதாமதமாக வீட்டுக்கு வந்த மாணவியிடம் பெற்றோர் கேள்வி கேட்டபோது, சிறுமியாக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் மாணவிக்கு நினைவுக்கு வந்துள்ளன.

ஓய்வு பெற்ற வீரர்

சிறப்பு ஆயுத படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரரான தாத்தா, மாணவி சிறுமியாக இருந்தபோது அவரிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். அப்போது, பெற்றோரிடம் நடந்த விசயங்களை புகாராக சிறுமி கூறியுள்ளார். இதன்பின்னர், அவர்கள் வேறிடத்திற்கு சென்று வசித்து வந்தனர்.

அப்போது, பாதுகாப்பு தரும் வகையில் பெற்றோர் நடந்து கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பிய மாணவி, அந்த ஆத்திரத்தில் தாத்தாவை படுகொலை செய்துள்ளார் என கூறினார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com