

புதுடெல்லி,
டோக்லாமில் மோதல் ஏற்பட்ட பகுதியில் இருந்து சற்று தொலைவில் சீன மற்றும் இந்திய ராணுவம் நிலைக்கொண்டு உள்ளது. சீன ராணுவம் டோக்லாம் பகுதியில் ஹெலிகாப்டர் தளங்கள், பாதுகாப்பு நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை ராணுவ வீரர்களுக்காக உருவாக்குகிறது என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார்.
சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது. இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 73 நாட்கள் நீடித்து பின்னர் அமைதிநிலைக்கு திரும்பியது. இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே டோக்லாம் பகுதியில் சீனா கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியது. இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்விகளுக்கு பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசுகையில், மோதல் போக்கு முடிந்த பின்னர் இருதரப்பும் தங்களுடைய நிலைக்கு திரும்பியது அங்கு ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது, இருதரப்பிலும் நிலை நிறுத்தப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையானது குறைக்கப்பட்டு உள்ளது, என கூறிஉள்ளார். குளிர்காலங்களில் இப்போது நிலைக்கொண்டு உள்ள ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுவதற்கு சீன ராணுவம் சில கட்டமைப்பு பணிகளை மேற்கொள்கிறது. பாதுகாப்பு நிலைகள், பதுங்கு குழிகள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களை அமைக்கும் பணியை மேற்கொள்கிறது என தெரிவித்து உள்ளார் நிர்மலா சீதாராமன்.
டோக்லாம் மோதல் சம்பவம் நடைபெற்று 8 மாதங்கள் கழித்து, இந்தியா - சீனா எல்லை நிலவரம் தொடர்ந்து பதட்டமாகவே நீடிக்கிறது, மோதல் போக்கிற்கான சாத்தியம் உள்ளது என மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே கடந்த வாரம் கூறியது கவனம் பெற்றது. இந்நிலையில் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனிடம் இருந்து இந்த பதில் வந்து உள்ளது.