அனுமதிக்கப்படாத ஆயுதங்களை பயன்படுத்தி லடாக்கில் சீனா அத்துமீறல்;இந்தியா தக்க பதிலடி - பாதுகாப்பு ஆய்வறிக்கை

கிழக்கு லடாக் எல்லையில், சீன ராணுவம், பலமுறை அத்துமீற முயன்றபோதும், அனுமதிக்கப்படாத ஆயுதங்களை பயன்படுத்தியபோதும், இந்திய ராணுவத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு, உரிய பாடம் புகட்டப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Image courtesy : Reuters
Image courtesy : Reuters
Published on

புதுடெல்லி

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வருடாந்திர ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த ஜூன் 15 ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன ராணுவம் அத்துமீற முயன்றபோது, இந்திய ராணுவ துருப்புகள் போராடி தடுத்தது. அப்போது, இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால், நம்மை விட, சீன இராணுவம் பெரியளவிலான உயிரிழப்புகளை சந்தித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் உதவியுடன், அதிநவீன பீரங்கிகள், இலகுரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உடனடியாக குவிக்கப்பட்னர்.

பாங்காங் ஏரி, தெற்கு கரை பகுதியில், ஆகஸ்ட் 28, 29ஆம் தேதிகளில், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் முன்கூட்டியே தடுக்கப்பட்டு, சீன படைகள் விரட்டி அடிக்கப்பட்டன.

அவ்வப்போது சீன இராணுவம் அத்துமீற முயற்சிக்கும் சமயங்களில் எல்லாம், விரிவான விவரிக்க முடியாத அளவிற்கு, கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு, இந்திய ஆளுகையை, நமது இராணுவம் உறுதி செய்துள்ளது.

பரஸ்பர ஒப்பந்தங்களை மீறி, சீன இராணுவம், போர் காலங்களில் கூட அனுமதிக்கப்படாத, வழக்கத்திற்கு மாறான ஆயுதங்களை பயன்படுத்தியபோதும் (வழக்கத்திற்கு மாறான ஆயுதங்கள் குறித்து அமைச்சகம் விரிவாகக் கூறவில்லை என்றாலும், கடந்த ஆண்டு பாங்காங் த்சோ மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களின் போது பி.எல்.ஏ துருப்புக்கள் இந்திய வீரர்களை கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் ஆணி பதித்த கிளப்புகளால் தாக்கினர்) இந்திய இராணுவம், தனது பாதுகாப்பு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை .

சீனா தனது இராணுவத்தின் மூலம், லடாக் எல்லையில் அத்துமீறல் போக்கையும், வரம்பு மீறிய செயல்களை நிறுத்திக் கொள்ளாத வரை, படைகளை விலக்கி கொள்ளுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்தவொரு முடிவிற்கும் இந்திய இராணுவம் தயாராக இருக்கும்போது, பிரச்சினையை ஒரு இணக்கமான முறையில் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எல்லையை பதற்றத்தை குறைப்பதற்காக இரு தரப்பினரும் ஒன்பதாவது சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்தியாவும் சீனாவும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com