சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் - வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உறுதி

லடாக் பகுதியில் சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஸ்ரீநகர்,

வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பதாமி பேக் கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

அசல் எல்லை கோட்டு பகுதியில், ஏற்கனவே உள்ள நிலைமையை தன்னிச்சையாக மாற்ற சீனா முயற்சி மேற்கொண்டது. அதற்கு இந்திய படைகள் உடனடி நடவடிக்கை எடுத்தன.

லடாக் பகுதியில் சீன படைகளின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம். இந்திய முப்படைகளிடையே நல்ல ஒருங்கிணைப்பு காணப்படுகிறது.

அசல் எல்லை கோடு சூழ்நிலைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள், தூதரக மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.

கிழக்கு லடாக் பகுதியில், ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாக நாட்டின் ஒருமைப்பாடு உறுதி செய்யப்படுகிறது

தொடர்ந்து உருவாகி வரும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை சந்திக்க வடக்கு பிராந்தியம் தயார்நிலையில் உள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் பல்வேறு சவால்கள் உருவாகி வருகின்றன. வடக்கு, மேற்கு எல்லைகளில் அச்சுறுத்தல் எழுகின்றன. நாட்டின் ஜனநாயக பாரம்பரியங்களை பாதுகாத்தபடியே இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.

நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறோம். அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்து வருகிறோம். நாட்டு நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

எதிர்காலத்திலும் எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளது. இந்த பிராந்திய மக்களின் நன்மைக்காக எப்போதும் பாடுபடுவோம்.

கடந்த 2 ஆண்டுகளாக, 370-வது பிரிவு நீக்கம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல், கொரோனா அலைகள் என்று புதிய சவால்கள் ஏற்பட்டன. இவை எங்கள் உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கவே செய்தன என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com