

இடாநகர்
நான் சீன சிறுமியல்ல, இந்தியர் என தேசிய கீதம் பாடி 4 வயது சிறுமி நிரூபித்துள்ளாள்.
அருணாசல பிரதேசத்தின் இடாநகர் பகுதியில் வசித்து வரும் 4 வயது சிறுமி டிங்கிள் கார்கா கோங்கோ. தன்னுடைய தாய் ஆயும் கர்தேவிடம் ஐஸ் கிரீம் வாங்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என்று டிங்கிள் கேட்டுள்ளாள். ஆனால் தாய் கர்தே, பணம் கொடுக்காமல் பொறுப்புடன் டிங்கிளை அழைத்து கொண்டு வெளியே சென்று கடையில் ஐஸ் கிரீம் வாங்கி தந்துள்ளார்.
அப்போது கடைக்காரரிடம் கர்தே இந்தியில் பேசினார். டிங்கிளும் கூட இந்தியில் பேசியுள்ளார். இதன்பின்பு, சக தோழிகளிடம் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டது பற்றி டிங்கிள் வியந்து பேசினார். இதுபற்றி விமர்சனம் தெரிவித்த ஒருவர், ஏன் இந்த சீன குழந்தை இந்தியில் பேசுகிறது? சீன குழந்தைகளுக்கு இந்தியில் பேச தெரியுமா? என கேட்டுள்ளார்.
இதனை மகள் டிங்கிளிடம் தாய் கர்தே கூறினார். நீ சீனரா, இந்தியரா? என அவர் கேட்கிறார் என கூறியதற்கு பதிலளித்த சிறுமி, இல்லை இல்லை. நான் இந்தியர்தான். என்னுடைய தந்தையும் இந்தியர்தான். அதனால், நானும் இந்தியர்தான் என கூறியுள்ளாள்.
எங்களை சீனர்கள் என கூற வேண்டாம். அது என்னை கோபப்படுத்துகிறது. எங்களை இந்தியர்கள் என அழையுங்கள் என கூறியிருக்கிறாள். இதனை கர்தே வீடியோவாக எடுத்துள்ளார். அது வைரலாகி உள்ளது. இதேபோன்று சிறுமி டிங்கிள் தேசிய கீதமும் பாடி சல்யூட் வைத்துள்ளார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.