சீனர்களுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சீனாவில் இருந்து 28 தமிழர்கள் உள்பட மேலும் 323 பேர் நேற்று டெல்லி அழைத்துவரப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சீனர்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்து உள்ளது.
சீனர்களுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றி, பிறகு பிற மாகாணங்களுக்கும் பரவியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, தைவான், மலேசியா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், இங்கிலாந்து, ரஷியா, இந்தியா என உலகின் 25 நாடுகளில் பரவி உள்ளது.

இன்னும் இந்த நோய்க்கு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் பெருத்த சோகம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் கேரளாவில் 2 பேருக்கு இந்த வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு ஆஸ்பத்திரியில் இந்த நோய்க்கான அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து, உகான் நகரமே துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தவித்து வந்த இந்தியர்களை இங்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ஏர் இந்தியாவின் ஜம்போ பி-747 ரக விமானம் கடந்த வெள்ளிக்கிழமை சீனா சென்றது. அந்த விமானம் உகானில் இருந்து 211 மாணவர்கள் உள்பட 324 இந்தியர்களை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலையில் டெல்லி புறப்பட்டது. அந்த விமானம், காலை 7.30 மணிக்கு டெல்லி வந்து அடைந்தது. இந்த 324 பேரில், 53 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

324 பேரில் 220 பேர் அரியானா மாநிலம், மானேசர் ராணுவ மருத்துவ முகாமுக்கும், 104 பேர் டெல்லியில் இந்திய, திபெத் எல்லை போலீஸ் படையால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமுக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பார்கள். இந்த விமானத்தில் ஏற இருந்த 6 இந்தியர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் அவர் களை, விமானத்தில் ஏற சீன குடியேற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

உகானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு இரண்டாவது ஏர் இந்தியா ஜம்போ பி-747 ரக விமானம், சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 323 இந்தியர்களும், மாலத்தீவை சேர்ந்தவர்கள் 7 பேரும் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை சுமார் 9.30 மணிக்கு டெல்லி வந்திறங்கியது.

இந்த விமானத்திலும் 4 இந்தியர்கள் கடுமையான காய்ச்சலால் பயணிக்க முடியாமல் போய்விட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் வந்த இந்தியர்கள் 323 பேரில் 28 பேர் தமிழர்கள் ஆவார்கள். இதன்மூலம் சீனாவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.

இந்த குழுவில் டெல்லி வந்து சேர்ந்துள்ள மற்றவர்களைப் பொறுத்தமட்டில் ஆந்திரா-2, பீகார்-42, டெல்லி-16, குஜராத்-4, அரியானா-16, இமாச்சலபிரதேசம்-1, ஜம்மு காஷ்மீர்-29, ஜார்கண்ட்-2, கர்நாடகம்-4, கேரளா-73, மத்திய பிரதேசம்-6, மராட்டியம்-14, ஒடிசா-1, பஞ்சாப்-5, ராஜஸ்தான்-14, உத்தரபிரதேசம்-53, உத்தரகாண்ட்-2, மேற்கு வங்காளம்-9 ஆகியோர் அடங்குவர்.

இவர்களும் அரியானா மற்றும் டெல்லி ராணுவ மருத்துவ முகாம்களில் 14 நாட்கள் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.

ஹூபெய் மாகாணத்தில் இன்னும் 100 இந்தியர்கள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை அழைத்து வர மற்றொரு இந்திய விமானம் அங்கு செல்லக்கூடும்.

இதற்கு மத்தியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

சீன நாட்டினருக்கும், சீனாவில் தங்கியுள்ள பிற நாட்டினருக்கும் இ-விசா வழங்கும் நடைமுறையை இந்தியா நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இது ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீன நாட்டினரோ, அங்கு தங்கியுள்ள பிற நாட்டினரோ இந்தியாவில் நுழைவது தடுத்து நிறுத்தப்படுகிறது.

இ-விசாவை பொறுத்தமட்டில் சீன நாட்டினரோ, அங்குள்ள பிற நாட்டினரோ இந்திய தூதரகத்துக்கு செல்லாமல் ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்துகொண்டே விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைன் விசா விண்ணப்பம் ஏற்கப்பட்டு விட்டால், விண்ணப்பித்தவருக்கு இ-மெயிலில் தெரிவிக்கப்படும். அவர்கள் அதை வைத்துக்கொண்டு இந்தியா வரலாம். இந்தியா வந்த பின் அதில் முத்திரை குத்தப்படும் என்பது நடைமுறை.

இந்த இ-விசா நடைமுறையைத்தான் இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே சீனர்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கு அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தடை விதித்துள்ளன. நியூசிலாந்து, ரஷியா, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேசியா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இப்போது இந்தியாவும் சீனாவில் இருப்பவர்களுக்கு இ-விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com