

பாட்னா
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.
பீகாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பா.ஜனதா ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.
எனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது; இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய அமைச்சர் பதவி சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அவர்கள் அணி திரண்டுள்ளனர். மொத்ததமுள்ள 6 எம்.பி.க்களில் 5 பேர் சிராக் பாஸ்வான் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
சிராக் பாஸ்வானுக்கு பதில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஹாஜிபூர் எம்.பி. பசுபதி குமார் பராஸை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என முடிவெடுத்து சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளனர்.
அவர்கள் 5 பேரும் அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பேசினர். பசுபதி குமார் பராஸை சமாதானம் செய்யும் சிராக் பாஸ்வானின் முயற்சி பலனளிக்கவில்லை. இந்தநிலையில் அவர்கள் நிதிஷ் குமார் மற்றும் பா.ஜனதா தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தேசியத் தலைவர்சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டார்.
அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், எம்.பி.க்கள், ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறினர்.
லோக் ஜனசக்தி கட்சி போர்க்கொடி தூக்கி உள்ள எம்.பி.க்கள் சூரஜ் பன் சிங்கை கட்சியின் புதிய செயல் தலைவராகவும் தேர்தல் அதிகாரியாகவும் தேர்வு செய்துள்ளனர். கட்சியின் தேசிய நிர்வாகியை அழைத்து ஐந்து நாட்களுக்குள் புதிய லைவருக்கான தேர்தலை நடத்துமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
பசுபதி குமார் பராஸ், விரைவில் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சி குறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காத சிராக் பாஸ்வான். அவர் தனது மாமா மற்றும் பசுபதி குமார் பராஸை தனது மறைந்த தந்தை ராம் விலாஸ் பாஸ்வானைப் போல கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.