

அமிர்தசரஸ்,
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஏற்பட்டு வந்த ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழ் இருந்த நிலையில், தற்போது 40 ஆயிரத்தை நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று நாட்டில் 2-வது அலையை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. எனவே தொற்றை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
அதேநேரம் தங்கள் மாநிலங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநிலங்களும் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. இதில் முக்கியமாக இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன.அந்தவகையில் பஞ்சாப்பில் லூதியானா, ஜலந்தர், மொகாலி, பாட்டியாலா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களில் 100- பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அடுத்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என ஒரு மணி நேரம் அமைதி நேரம் கடைபிடிக்கப்படும். அந்த சமயத்தில் வேறு எந்த வாகனங்களும் சாலைகளில் ஓட அனுமதி கிடையாது எனவும் பஞ்சாப் அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.