நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் : மத்திய மந்திரி சாந்தனு தாகூர்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சாந்தனு தாகூர் கூறினார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் : மத்திய மந்திரி சாந்தனு தாகூர்
Published on

கொல்கத்தா,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் குடிபெயர்ந்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்தன. எனவே இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு உள்ளது. அதேநேரம் இந்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறி வருகிறது. குறிப்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தொடர்ந்து இந்த சட்டத்தின் அமலாக்கம் குறித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய துறைமுகங்கள், நீர்வழித்துறை இணை மந்திரி சாந்தனு தாகூர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும். இது எனது உத்தரவாதம்' என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சாந்தனு தாகூர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தொடர்ந்து பேசி வரும் சாந்தனு தாகூர், தற்போது ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் என கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com