2020-ம் ஆண்டில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு: பின்னணி என்ன?

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு ஆகி உள்ளன. இதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா இறப்புகளை கணக்கிட சர்வதேச அமைப்புகள் மாதிரிகள் அடிப்படையிலான ஆய்வுகளை பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை விவகாரத்தில் சமீபத்தில் மத்திய அரசுக்கும், உலக சுகாதார அமைப்புக்கும் கூட கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்தநிலையில் இந்திய சிவில் பதிவு அமைப்பின் (சி.ஆர்.எஸ்.) 2020-ம் ஆண்டுக்கான தரவுகளை இந்திய தலைமை பதிவு இயக்குனர் (ஆர்.ஜி.ஐ) வெளியிட்டுள்ளார்.

இதில் கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வந்த 2020-ம் ஆண்டில் அனைத்து காரணங்களாலும் நேரிட்ட இறப்பு என்ற வகையில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது. இதனால் 2020-ம் ஆண்டில் கொரோனா இறப்புகள் உள்பட மொத்த இறப்புகள் எண்ணிக்கை 76.4 லட்சத்தில் இருந்து 81.2 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 6 சதவீதம் அதிகம் ஆகும்.

2020-ம் ஆண்டு சி.ஆர்.எஸ். தரவுகள்படி பஞ்சாப், சண்டிகார், மிசோரம், அரியானா, மேற்கு வங்காளம், அந்தமான் நிகோபார், புதுச்சேரி, இமாசலபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் ஆகிய 11 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 2020-ம் ஆண்டில் நேரிட்ட அனைத்து வகையான 90 சதவீத இறப்புகளை பதிவு செய்துள்ளன.

இந்த கூடுதலான 4.75 லட்சம் இறப்புகளுக்கு காரணம் கொரோனா தொற்றா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:-

நாம் கொரோனா இறப்புகள் பற்றி பேசுகிறபோது, அனைத்து வித காரணங்களாலும்தான் 2020-ம் ஆண்டு கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், பதிவு நடைமுறை எளிதாக இருப்பதும்கூட காரணங்கள் ஆகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பது போலவே இறப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே கூடுதலான இறப்புகள் அனைத்தும் கொரோனாவால் நேரிட்டவை என்று கூற முடியாது. 2020-ம் ஆண்டில் இறப்புகள் எண்ணிக்கை அதிரடியாக ஒன்றும் உயரவில்லை. உள்ளபடியே கூறுவதென்றால் 2020-ம் ஆண்டின் கூடுதல் இறப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் (6.9 லட்சம்) குறைவுதான்.

சி.ஆர்.எஸ். பதிவு முறை உண்மையான இறப்பு பதிவுகளை வழங்குகிறது. இதன் அறிக்கையில் எல்லா காரணங்களால் நிகழ்ந்த இறப்புகள் கணக்கு காட்டப்பட்டுள்ளன. நமது நாட்டின் கொரோனா இறப்புகளில் பிற அமைப்புகள் பின்பற்றி வரும் மிகையான பெருக்கல் முறைகளுக்கு இதில் இடம் இல்லை.

இந்தியாவில் கொரோனா இறப்புகள்பற்றி அறிக்கையிடும் சர்வதேச அமைப்புகள், ஊகத்தின் அடிப்படையிலான மாதிரிகளின் அடிப்படையிலானதை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக சட்டப்பூர்வமான, நன்கு நிறுவப்பட்ட இந்த அமைப்பின் உண்மையான எண்ணிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com