சுப்ரீம்கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்?

சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

நாட்டின் அடுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளன. தற்போது சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியது.

பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறை. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு. லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதன்படி யு.யு.லலித் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தெரிகிறது.

புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள யு.யு லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் யு.யு. லலித் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com