

புதுடெல்லி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன்பின்னர் இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லியில் ஜந்தர் மந்தருக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் கடந்த 13-ந்தேதி வருகை தந்தனர்.
அப்போது அவர்களிடம், இந்த பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவருடன் 10-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தனர். பூட்டியிருந்த வாசல் கதவுகளின் மீது ஏறி, அவர்கள் மறுபுறம் சென்றனர். இதனை தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட செய்தி தொடர்பாளர்கள் இருவர் மற்றும் அவர்களுடன் சென்ற அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி, அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் 5 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதன்பின்னர் அவர்கள் 2 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறப்பு மாஜிஸ்திரேட் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 2 பேருக்கும் நீதிமன்ற காவலை 2 நாட்களுக்கு நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நாளை மறுநாள் (புதன் கிழமை) மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், சி.ஜே.பி.யின் நிறுவனர் அபிஜீத் திப்கே, ‘எக்ஸ்’ தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்காவை சிறையில் அடைத்த பிறகு, இளைஞர்களை தெருக்களில் போட்டு அடித்த பிறகு, டெல்லி முழுவதும் தடுப்புகளை போட்ட பிறகு நீங்கள் மிகவும் பலம் வாய்ந்தவராக உணரலாம். சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா இருவரும் ஜந்தர் மந்தருக்கு தேசிய கொடியை ஏந்திச் சென்றதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களின் நீதிமன்ற விசாரணை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்குப் பெயர்தான் பலமா? காவல்துறை மற்றும் நீதித்துறைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதுதான் மோடியின் பலமா? இவர்களை சிறையில் அடைத்த பிறகு நீங்கள் மிகவும் பலமான பிரதமராக உணர்கிறீர்களா? இல்லை, நீங்கள் ஒரு கோழை.
பிரதமர் மோடி அவர்களே, மன்னிக்கவும், உங்களைப் பார்த்து நாங்கள் யாருமே பயப்படவில்லை. மேலும், நாங்கள் அமைதியாக இருக்கப் போவதும் இல்லை. எங்களை சிறைக்கு அனுப்புவதால் நாங்கள் அமைதியாகி விடுவோம் என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் நடக்காது.
சவுரவ் தாஸ் தன்னால் ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாது என்று நினைத்தார். ஆனால், 5 நாட்கள் சிறைவைக்கப்பட்ட பிறகும் இன்று அவர் சிரித்த முகத்துடன் கோர்ட்டுக்கு வந்தார். நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட பிறகும் அவர் பயப்படவில்லை. அதற்குப் பெயர்தான் பலம்.
யாரையும் அளவுக்கு அதிகமாக பயமுறுத்த முயன்றால், அவர்களின் பயம் காணாமலே போய்விடும். நீங்கள் இந்த நாட்டின் இளைஞர்களை உங்கள் முடிந்தவரை அச்சுறுத்திவிட்டீர்கள். எங்களுக்குள் இருந்த பயம் இப்போது காணாமல் போய்விட்டது. எனவே, இனி நாங்கள் பயப்பட மாட்டோம்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.