

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனரான ஆப்ஜித் தீப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு அமைதியான போராட்டத்திற்கு அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்திருந்தார். போராட்டக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வந்த ஆப்ஜித் தீப்கேவை ஆதரவாளர்களின் தோள்களில் சுமந்து வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அவரது கழுத்தில் இருந்த துண்டை இழுத்ததுடன், பலமுறை அறைந்தும் கீழே இழுத்து விட முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஜெயின் பிட்டு, “இந்த தாக்குதல் நடந்த விதம் போலீசாரின் செயல்பாடு மற்றும் அரசின் பங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. சமூக விரோதிகளை தடுக்க வேண்டிய நிர்வாகம், நிலைமை மோசமடைய அனுமதித்துள்ளது. ராஜஸ்தான் அரசும் போலீசாரும் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.தாக்குதலுக்கு பிறகு பேசிய அபிஜீத் திப்கே, “போராட்ட தளத்திற்குள் நுழைந்தபோது நான் தாக்கப்பட்டேன். எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் நான் யார் மீதும் கை வைக்க மாட்டேன். வன்முறையை கோழைகள் தான் பயன்படுத்துவார்கள். நான் மவுனமாக இருக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
மேலும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் ஆப்ஜித் தீப்கே கூறியதாவது: “எங்களை அச்சுறுத்தவும், மிரட்டவும், உண்மையான பிரச்சினையில் இருந்து திசை திருப்பவும் இதுபோன்ற செயல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் எங்கள் ஒரே கோரிக்கை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான். மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், மாணவர் தற்கொலை சம்பவங்களுக்கும் அவர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒருமுறை தாக்கினாலும், பத்து முறை தாக்கினாலும், ஒருமுறை அறைந்தாலும், பத்து முறை அறைந்தாலும் எங்கள் கோரிக்கை மாறாது. எங்கள் போராட்டம் அமைதியானது. அதை அமைதி மற்றும் அன்பின் வழியில் தொடர்ந்து முன்னெடுப்போம். எங்களை வெறுப்பவர்களிடம் நான் கூற விரும்புவது ‘விரைவில் நலம்பெறுங்கள் என்பதுதான்’ என்றார்.