மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாளை கூடுகிறது சுப்ரீம்கோர்ட்டு சிறப்பு அமர்வு

சிஜேபி போராட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், மெட்ரோ, சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாளை கூடுகிறது சுப்ரீம்கோர்ட்டு சிறப்பு அமர்வு
Published on: 

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க, சுப்ரீம்கோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை (அக்.11) ஞாயிறு அன்று கூடுகிறது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

3 ஆயிரம் பேர் கைது

இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மக்கள் கடும் அவதி

அதேபோல், சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்-மந்திரியுமான பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

அதேவேளை, சிஜேபி போராட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், மெட்ரோ, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு

இதனிடையே 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party) நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தையொட்டி, அக்டோபர் 10ம் தேதி (அதாவது இன்று) போக்குவரத்து சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு நேற்று (அக்டோபர் 9) உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதற்கும், ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை விசாரிக்க, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுப்ரீம்கோர்ட்டு சிறப்பு அமர்வு கூடுகிறது.

இதனிடையே டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி தாக்கல் செய்த இந்த மனுவையும் சேர்த்து, நாளை (அக்.11ம் தேதி) அவசர வழக்காக சுப்ரீம்கோர்ட்டு சிறப்பு அமர்வு விசாரிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com