

புதுடெல்லி
புதிய வரி செலுத்துவோர் குறித்து பிரதமர், நிதியமைச்சர், பொருளாதார ஆய்வு, மாநிலங்கள் அவையில் அளிக்கப்பட்ட பதில் ஆகியன மாறுபட்ட எண்ணிக்கையில் தகவல் அளித்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பிரதமரின் பேச்சில் குறிப்பிட்டது இரண்டு நிதியாண்டுகளை ஒப்பிட்டது. அதாவது நிதியாண்டு 2017-18 இன் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை 2.79 கோடி பேர் வரித்தாக்கல் செய்துள்ளனர். கடந்த நிதியாண்டான 2016-17 இல் இதே காலகட்டத்தில் 2.23 கோடி பேர் வரித்தாக்கல் செய்தனர். எனவே கூடுதலாக 56 லட்சம் பேர் வரித்தாக்கல் செய்துள்ளனர். மேலும் இது கூடுதலாக ஆகலாம் என்றும் நிதியமைச்சகம் எதிர்பார்க்கிறது.
பொருளாதார ஆய்வறிக்கை நவம்பர் 9 (2016 பணமதிப்பு நீக்கத்தின் மறுநாள்) 2016 லிருந்து 31 மார்ச் 2016 வரையிலான காலகட்டத்தை அதற்கு முன்னரான இரண்டு நிதியாண்டுகளுடன் ஒப்பிட்டு குறிப்பிட்டு கூறப்பட்டது. மொத்தமாக அந்த ஆண்டுகளில் புதிதாக இணைந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகிறது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டது 2016-17 ஆம் ஆண்டில் மொத்தமாக இணைந்த புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை என்று விளக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் குறிப்பிட்டது மொத்தமாக நவம்பர் 2016 லிருந்து மார்ச் 31 2017 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட எண்ணிக்கையாகும். அந்த எண்ணிக்கை 1.96 கோடியாகும். இதே காலகட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 1.63 கோடியாக இருந்துள்ளது. எனவே 33 லட்சம் பேர் கூடுதலாக வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என்று கூறப்பட்டது.
மேலே சொல்லப்பட்ட அனைத்து கணக்குகளும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டவையாகும். எனவே அனைத்து எண்ணிக்கையும் சரியானதே என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.