டெல்லியில் மார்ச் 2ந்தேதி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும்; சி.பி.எஸ்.இ.

டெல்லியில் வருகிற மார்ச் 2ந்தேதி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.
டெல்லியில் மார்ச் 2ந்தேதி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும்; சி.பி.எஸ்.இ.
Published on

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி கொல்லப்பட்டனர். இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

டெல்லியின் வடகிழக்கே கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு 42 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 13 ஆயிரத்து 200 பேரிடம் இருந்து வேதனை தெரிவித்து போலீசாருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என கூறப்படுகிறது. 148 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி வன்முறை காரணமாக வடகிழக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 7ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் வருகிற மார்ச் 2ந்தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்து, அனைத்து உதவிகளையும் அளிக்க காவல் துறை மற்றும் அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com