

போபால்,
மத்திய பிரதேசத்தில் தொடர் கனமழையால் நர்மதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஹோசங்காபாத் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ள நிலைமையை கண்காணிக்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹோசங்காபாத் மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டு வான்வழியே சென்று பார்வையிட்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்பொழுது, நர்மதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு கிராமங்கள் பாதிப்படைந்து உள்ளன. அதனை நான் வான்வழியே சென்று இன்று பார்வையிட்டு உள்ளேன்.
தொடர்ந்து மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இந்த வெள்ள நிலைமையையும் மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் பற்றி மேற்பார்வை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஆபத்து அளவை மீறி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதுவரை தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 2 குழுக்கள் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கு சென்றுள்ளன. கூடுதலாக 2 குழுக்கள் சென்று சேரும் என கூறப்படுகிறது.