

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறை பயணமாக கோரக்பூர் பிராந்தியத்திற்கு சென்று உள்ளார். கோரக்பூரில் பசு பாதுகாவலர்கள் மற்றும் 'ஆன்டி ரோமியோ' படைக்கு (உ.பி. பாலியல் தொல்லைகளை தவிர்க்க அம்மாநில அரசால் உருவாக்கப்பட்டது) கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளார். சட்டத்தை மீறி, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவர்கள் தப்பிக்க முடியாது என எச்சரித்து உள்ளார். உ.பி.யில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது, அப்போது ஒரு கும்பல் இறைச்சி கடைகளை எரித்து வன்முறையில் ஈடுபட்டது.
இதற்கிடையே பசு பாதுகாவலர்கள் என கூறிகொள்பவர்கள் பிறரை தாக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் தப்ப முடியாது என எச்சரித்து உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சியில் சிறந்த மாநிலமாக்க வேண்டும் என்ற மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் நான் இறங்கி உள்ளேன், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் என்பதே கிடையாது, சட்டத்தை மீறுபவர்கள் யாரும் தப்ப முடியாது, என எச்சரித்து உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பிற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி.யில் பா.ஜனதா அரசின் செயல்பாடு குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், நாங்கள் 24 மணி நேரம் மின்சாரம் கொடுப்போம், விரைவில் தரமான சாலைகளை கொடுப்போம் என்றார்.
என்னுடைய மாநிலம் எந்தஒரு விவசாயியையும் தற்கொலை செய்துக் கொள்ள தள்ளாது என உறுதியளிக்கின்றேன் என கூறிஉள்ளார் யோகி ஆதித்யநாத்.