

கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. எம்.பி.யான இவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ளார். அதன் பொது செயலாளராக வினய் மிஸ்ரா உள்ளார்.
திரிணாமுல் காங்கிரசின் தலைவர்களுக்கு நிலக்கரி மாபியா கும்பல் பணம் கொடுத்து தங்களது கடத்தல்களை செய்து வந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில், வினய் மிஸ்ரா வழியே பணபரிமாற்றம் நடந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 31ந்தேதி, வினயின் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது.
ஆனால், சி.பி.ஐ. பிடியில் சிக்காமல் வினய் தப்பி விட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
சட்டவிரோத நிலக்கரி சுரங்க பணிகள் மற்றும் நிலக்கரி கொள்ளை சம்பவங்கள் நீண்டகாலம் ஆக நடந்து வருகின்றன. இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இந்த சூழலில், அபிஷேக்கின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு நிலக்கரி கடத்தல் சம்பவத்தில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை மேற்கொள்வதற்காக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இதற்காக கொல்கத்தாவில் உள்ள அபிஷேக் வீட்டுக்கு சி.பி.ஐ. குழு சென்றது.
ஆனால், வீட்டில் அவரது மனைவி இல்லை. இதனால் அவரது குடும்பத்தினரிடம் நோட்டிஸ் ஒன்றை ஒப்படைத்து விசாரணைக்காக வரும்படி தெரிவித்து விட்டு அதிகாரிகள் சென்றனர். விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன் என எப்பொழுது ருஜிரா பானர்ஜி கூறுகிறாரோ நாங்கள் அவரது வீட்டுக்கு மீண்டும் செல்வோம் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அபிஷேக்கின் உறவினர் மேனகா காம்பீருக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.