

புதுடெல்லி,
நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர்.
நீட் தேர்வு முறைகேடு. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர். போராட்டம் குறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "போராட்டத்தை முடக்க போலீசார் முயல்வதால், தொண்டர்கள் அனைவரும் நேற்று இரவு முழுவதும் ஜந்தர் மந்தரிலேயே தங்கி விழிப்புடன் இருக்க வேண்டும். பேரணி முற்றிலும் அமைதியான முறையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போராட்டத்திற்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஷபானா ஆஸ்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த 3 வாரங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நேற்று முன்தினம் போலீசாரால் வலுக்கட்டாயமாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தபடியே அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த தொண்டர்களிடையே சோனம் வாங்சுகின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ பேசுகையில், "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கல்வித்துறை பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்கப்படும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து சோனம் வாங்சுகிடம் உறுதியளித்தால், அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக் கொள்வார்" என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.