

வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியவரும், அமெரிக்காவின் Boston பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் தீப்கே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என்ற நையாண்டி கட்சியை தொடங்கினார். அதில் பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகினர். அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர். இது நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தன்னுடைய இன்ஸ்டகிராம் மற்றும் கட்சியின் இணையதளங்கள் முடக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த நையாண்டி கட்சியின் பிரசாரம் வைரலாகி லட்சக்கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இணையதளமே 'ஹேக்' செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய அளவில் இந்த ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய பல்வேறு சமூக வலைத்தளங்களும் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீப்கே குற்றம் சாட்டியிருக்கிறார். தீப்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்கம் முடக்கப்பட்டது. எக்ஸ் கணக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின்னால் இருந்த மற்றொரு கணக்கும் முடக்கிவைக்கப்பட்டுள்ளது என்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எந்த சமூக வலைத்தளப் பக்கங்களையும் எங்களால் இயக்க முடியவில்லை. எனவே, அதில் ஏதேனும் பதிவுகள் வந்தால், அது அதிகாரப்பூர்வ தகவலாக இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.