மலை மாதேஸ்வரா கோவிலில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

மலை மாதேஸ்வரா கோவிலில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஷில்பா நாக் நேரில் பார்வையிட்டார். மேலும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க கூறி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மலை மாதேஸ்வரா கோவிலில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
Published on

கொள்ளேகால்:-

பிரமாண்ட சிலை

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலில் புலி மீது மாதேஸ்வரன் அமர்ந்திருப்பது போன்ற 108 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் அருகிலேயே இன்னொரு பிரமாண்ட சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த 2 சிலைகள் அமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. மேலும் அங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த பணிகள் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

ஆமை வேகத்தில் பணிகள்

இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் அந்த பணிகளை விரைந்து முடிக்க கூறி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் பணிகள் தொடர்ந்து ஆமை வேகத்திலேயே நடந்து வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கலெக்டர் ஷில்பா நாக் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நேரில் சென்றார். அவர் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேதம் அடையக்கூடும்

மலை மாதேஸ்வரா சிலை இங்கு பிரமாண்டமாக அமைகிறது. இந்த இடத்தை ஒரு சுற்றுலா போன்று அமைத்து வருகிறோம். பெட்ரோல் வாகனங்கள் சிலை அருகில் வந்தால் காற்று மாசு காரணமாக சிலை சேதமடையக்கூடும் என்பதால் வெகு தூரத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தி விடவும், அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பேட்டரி வாகனம் மூலம் வந்து சிலையை பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இந்த இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த சிலைகள் அமைந்துள்ள வரைபடத்தை பார்வையிட்டேன். இப்பகுதி முழுவதும் சோலார் மூலம் மின் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு அதற்காக பணிகள் நடந்து வருகிறது.

பக்தர்கள் ஓய்வு எடுக்கும் மண்டபங்கள் இதுமட்டுமின்றி ரூ.8.51 கோடி செலவில் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com