

தாவணகெரே-
சன்னகிரி அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ. 34 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிவிட்டு சென்றனர்.
கல்லூரி பேராசிரியர்
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி டவுன் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரப்பா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். சித்தேஸ்வரப்பா சன்னகிரி அருகே அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டு விட்டு அருகே உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்க நகை, ரொக்கப்பணத்த திருடி விட்டு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய சித்தேஸ்வரப்பா பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.34 லட்சம்...
பின்னர் உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சன்னகிரி போலீசில் சித்தேஸ்வரப்பா புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து சன்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.