

புதுடெல்லி,
மக்களவையில் நேற்று மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வி நிலையங்கள் (ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு) சட்டம்-2019 என்ற சட்டமசோதாவை தாக்கல் செய்தார். இதன்மூலம் 41 மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் வழிவகுக்கப்படுகிறது. அவசர சட்டத்துக்கு பதிலாக இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். இது ஏற்கப்படாமல், சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.