பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்

சோபியா என்னுடைய சகோதரி மட்டுமல்லாமல் நாட்டுக்கே சகோதரி ஆவார் என அவருடைய இரட்டை சகோதரியான ஷைனா சன்சாரா கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்
Published on

வதோதரா,

குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வாகன பேரணியின்போது, திறந்த காரில் நின்றபடி பிரதமர் மோடி சாலை வழியே சென்றார். அப்போது, திரண்டிருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பூக்களை தூவி அவரை வரவேற்றனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னின்று நடத்திய இந்திய ராணுவ பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர்.

அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் பொதுமக்களுடன் ஒன்றாக நின்றபடி பிரதமரை நோக்கி பூக்களை தூவினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் அவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். இதுபற்றி சோபியா குரேஷியின் இரட்டை சகோதரியான ஷைனா சன்சாரா செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்த நிகழ்வை நாங்கள் சிறப்பாக உணர்கிறோம். பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பிரதமர் மோடி நிறைய பணிகளை செய்திருக்கிறார் என்றார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, சோபியா என்னுடைய இரட்டை சகோதரி. என்னுடைய சகோதரி நாட்டுக்காக ஏதேனும் செய்கிறார் என்றால், அது எனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உந்துதலை ஏற்படுத்தும். அவர் இனி, என்னுடைய சகோதரி மட்டுமல்லாமல் இந்திய நாட்டுக்கே சகோதரி ஆவார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com