குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து: கேரள கவர்னருக்கு காங்கிரஸ் கூட்டணி கடும் கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கேரள கவர்னருக்கு காங்கிரஸ் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து: கேரள கவர்னருக்கு காங்கிரஸ் கூட்டணி கடும் கண்டனம்
Published on

கோழிக்கோடு,

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் டெல்லி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் நடைபெற்ற குடியுரிமை தொடர்பான கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர், 1947-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க ஒப்புக்கொண்டது. காந்தி, நேரு ஆகியோரும் இந்த உறுதியை அளித்தனர். அதனை பின்பற்றியே இப்போது குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

இதற்காக கேரள கவர்னருக்கு அந்த மாநில பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கே.சி.ஜோசப் கூறியதாவது:-

உயர்ந்த அரசியல்சாசன பதவியில் இருக்கும் கவர்னர் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நிலைக்கு தாழ்ந்துபோவது துரதிர்ஷ்டவசமானது. பா.ஜனதா கட்சியைப்போலவே கவர்னரும் திரித்துக்கூறப்பட்ட வரலாற்றை முன்வைக்க முயன்றுள்ளார்.

கவர்னர் கூறியதுபோல குடியுரிமை திருத்த சட்டம் காங்கிரஸ் கட்சியினர் கூறியதன் அடிப்படையில் உருவானது என்பது அடிப்படை ஆதாரமற்றது. காங்கிரஸ் எப்போதும் ஒரு நபருக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க முடிவு செய்ததில்லை. இவ்வாறு ஜோசப் கூறினார்.

மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம்.சுதீரன் கூறும்போது, கவர்னர் மத்திய அரசின் மக்கள் தொடர்பு அதிகாரிபோல செயல்படுகிறார். மத்திய அரசு எடுத்துள்ள பைத்தியக்காரத்தனமான முடிவான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு அவர் வர்ணம் பூச முயற்சிக்கிறார். அந்த சட்டத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர் நியாயம் கற்பிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் கேரள சமுதாயத்திடம் இருந்து அவர் பெற்றுக்கொண்ட உடன்பாட்டை இழக்க நேரிடும் என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ.மஜீத், கவர்னரின் கருத்து மிகவும் மோசமானது. கவர்னர் பதவியில் இருக்கும் நபரிடம் இருந்து இதுபோன்ற கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com