

புதுடெல்லி
மேற்காசியாவில் கடந்த 12 நாட்களாக நடந்து வரும் கடுமையான மோதல் போக்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.118 என அதிரடியாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
சில இடங்களில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி 2 நாட்களுக்கு முன்பு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாம் பல்வேறு வழிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து இந்தியாவுக்கான எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவில் சி.என்.ஜி. மற்றும் பி..என்.ஜி. ஆகிய வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளது.
அதனால், பயப்பட வேண்டிய தேவையில்லை என கூறினார். போர் சூழலிலும், ஆலைகளுக்கான 70 முதல் 80 சதவீத எரிபொருள் வினியோகம் இருக்கும் என அவர் கூறினார். எனினும், சிலிண்டர் பற்றாக்குறையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவிலான ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடக்கூடிய அபாய சூழல் காணப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை சந்திக்க கூடும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிலை பற்றி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் மக்களவையில் இன்று விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறும்போது, வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.
சமையல் கியாஸ் சிலிண்டர் உற்பத்தி கடந்த சில நாட்களில் 28 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிலிண்டர் விநியோக கால அளவில் மாற்றம் எதுவுமில்லை. நாட்டுக்கு தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி விளக்கமளித்து உள்ளார்.
நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. எனினும், உள்நாட்டு தேவைக்காக கியாஸ் சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடரும். ஹார்மூஸ் ஜலசந்தி வழியே வரும் கச்சா எண்ணெய்யைவிட மாற்று வழியில் கூடுதல் எண்ணெய் வருகிறது.
சீரான எரிபொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம். கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்தி பரவுகிறது. ஆனால், தடையின்றி கியாஸ் சிலிண்டர் கிடைக்க உறுதி செய்வோம் என அவர் தெரிவித்து உள்ளார்.