'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குறிப்பாக கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்த மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம், அக்டோபரில் தொடங்கும் 2024-25-ம் ஆண்டு பருவத்தில் சர்க்கரை ஆலைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 வீதம் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்யும். மத்திய அரசு, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2024-25 சர்க்கரைப் பருவத்திக்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.340 என்ற அடிப்படை விகிதத்திற்கு உயர்த்த மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, விவசாயிகள் நலனில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார். அதில், "நாடு முழுவதும் உள்ள நமது விவசாய சகோதர சகோதரிகளின் நலன் தொடர்பான ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்தச் சூழலில், கரும்பு கொள்முதல் விலையில் வரலாற்று சிறப்புமிக்க உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்." என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com