நடன நிகழ்ச்சியில் சலசலப்பு... அடித்து எலும்பை நொறுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட மராட்டிய மந்திரி

மராட்டிய மந்திரி அப்துல் சட்டார், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர் அப்துல் சட்டார். சில்லோடு தொகுதி எல்.எல்.ஏ.வான அப்துல் சட்டார், மராட்டிய மாநில அரசின் சிறுபான்மையினர் வளர்ச்சித்துறை மந்திரியாக உள்ளார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அப்துல் சட்டார், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபல மராட்டிய நடன கலைஞர் கவுதமி பட்டீல் நடனமாடினார். இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் குவிந்தனர்.

இந்நிலையில், நடன நிகழ்ச்சியின்போது பார்வையாளர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பார்வையாளர்களை அமைதியாக இருக்குமாறு அப்துல் சட்டார் கூறியுள்ளார். ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், காவல்துறையினரிடம் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த அப்துல் சட்டார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், குழப்பம் செய்பவர்களை நாய்களைப் போல் அடித்து விரட்டுங்கள் எனவும், அவர்களின் எலும்புகளை அடித்து நொறுக்குங்கள் எனவும் காவல்துறையினரிடம் அப்துல் சட்டார் கூறிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அப்துல் சட்டாரின் பேச்சுக்கு மராட்டிய மாநில எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com