சுப்ரீம் கோர்ட்டு அனுமதி: சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் சென்றார் - காவலில் இருக்கும் நண்பருடன் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் ஸ்ரீநகர் சென்று, அங்கு காவலில் உள்ள தனது கட்சி நண்பர் தாரிகாமியை சந்தித்தார்.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி: சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் சென்றார் - காவலில் இருக்கும் நண்பருடன் சந்திப்பு
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த 5-ந் தேதி ரத்துசெய்யப்பட்டதில் இருந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது யூசுப் தாரிகாமியும் ஒருவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்த மாத தொடக்கத்தில் காஷ்மீர் செல்ல முயன்றபோது விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் சென்றபோதும் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனால் சீதாராம் யெச்சூரி, தன்னை ஸ்ரீநகர் செல்லவும், தாரிகாமியை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த நாட்டின் குடிமகன் காஷ்மீர் செல்வதிலும், தனது நண்பர் மற்றும் கட்சியின் சக தோழரை சந்திப்பதிலும் உங்களுக்கு என்ன கஷ்டம்? என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் கேள்வி எழுப்பியது.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு, சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் செல்லவும், தாரிகாமியை சந்திக்கவும் அனுமதி வழங்கியது. அதன்படி, யெச்சூரி நேற்று காலை ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து நேரடியாக தாரிகாமி காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

ஆனால் யெச்சூரி ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்களை சந்திக்கவோ அல்லது தனது பயணம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவோ மறுத்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com