கேரளாவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகார்: விசாரணைக்கு உத்தரவு

விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
கோப்பு படம் (பிடிஐ)
கோப்பு படம் (பிடிஐ)
Published on

கேரளத்தில் கடந்த 9-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கோழிக்கோடு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்கள் வெள்ளிமாடக்குன்னு அருகே உள்ள வாக்கு எண்ணும் மையமான கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங் ரூம்) திறக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரவீன் குமார் கூறும்போது, “வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திடீரென திறக்கப்பட்டது. இது தவறான செயல். இதுகுறித்து விசாரணை நடத்த கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்படவில்லை. இது தவறான தகவல். தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை மட்டுமே திறக்கப்பட்டது. அந்த அறை அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது” என்றனர்.

மேலும் பேராம்பிரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பாத்திமா தக்கிலியா கூறும்போது, “வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்ட அறையை திறக்க உள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வருமாறும் என்னை தேர்தல் அதிகாரிகள் அழைத்தனர். அங்கு சென்ற பின்னர் அந்த அறை திறக்கப்பட்டது” என்றார். இதற்கிடையே, ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கோழிக்கோடு எம்.பி. ராகவன் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் சினேகில் குமார் சிங்குக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com