நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு - அகிலேஷ் யாதவ் புகார்

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு ஓட்டுகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு - அகிலேஷ் யாதவ் புகார்
Published on


லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சாய்பாயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராம்பூர் மற்றும் படவுன் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக வந்த புகார்களை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும். படவுன் தொகுதியில் மாநில மந்திரி ஒருவர் அங்கு போட்டியிடும் தனது மகளுக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவந்துள்ளது.

தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தான் மத்திய அரசு உறுதி அளித்த டிஜிட்டல் இந்தியாவா?

மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிபெறுவார். 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவும். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலைக்கு மாறிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அகிலேஷ் யாதவ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாக உள்ளன. அல்லது யாருக்கு வாக்களித்தாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுவதுபோல் உள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. உத்தரபிரதேசத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இது ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்படும் தேர்தல் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள குற்றவியல் அலட்சியம். இதனை நாம் நம்பலாமா? அல்லது இதைவிட பெரிய கொடுமையான நடைமுறை ஏதாவது உள்ளதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பிரதிநிதிகள் லக்னோவில் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரை சந்தித்து எந்திரங்கள் கோளாறு, மந்திரி பணம் கொடுத்தது ஆகியவை குறித்து புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி திவாரி கூறும்போது, சமாஜ்வாடி கட்சியினர் மாநில மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா தனது மகள் சங்கமித்ரா மவுரியாவுக்கு சாதகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு குறித்தும் புகார் கொடுத்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து இதுதொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com