அயோத்தி நிலப் பிரச்சினையில் சமரச குழு 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சமரச குழு வருகிற 31-ந்தேதிக்குள் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அயோத்தி நிலப் பிரச்சினையில் சமரச குழு 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக்கொள்ள அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் யோசனையை முன்வைத்த நீதிபதிகள், அதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தனர். சமரச குழுவுக்கு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான கோபால்சிங் விஷாரத் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சமரச குழுவால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, எனவே கோர்ட்டே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 11-ந்தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமரச குழுவின் தலைவர் பேச்சுவார்த்தை எந்தநிலையில் உள்ளது என்பது பற்றிய அறிக்கையை 18-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதை கோர்ட்டு ஆய்வு செய்து, சமரச குழுவால் தீர்வுகாண முடியாத நிலை இருப்பதாக கருதினால் வருகிற 25-ந்தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை தினசரி விசாரிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான சமரச குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், சமரச குழுவின் நடைமுறைகள் ரகசியத்தன்மை கொண்டவை என்பதால் அறிக்கையில் உள்ளதை தற்போது உத்தரவில் வெளியிட முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும் சமசர குழுவின் பேச்சுவார்த்தை தொடர்பான நிலை தகவல் அறிக்கையை வருகிற 31-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com