

புதுடெல்லி,
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அந்த கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான தகவல்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று மாலை நேரில் தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல். அதில் யார் ஏறினாலும் அவர்களும் மூழ்குவார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பலவீனம் அடைந்து, இரண்டாக உடைந்துள்ளது. பா.ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் எந்த அஸ்திவாரமும் கிடையாது. இந்த கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு திருநாவுக்கரசர் பதில் அளிக்கையில், கட்டாய கல்யாணம் அவசர அவசரமாகத்தான் நடைபெறும். நேற்று தி.மு.க.வுடன் பேசினார்கள். இன்று அங்கு போய்ச் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் காங்கிரசும், தி.மு.க.வும் மாமன் பொண்ணு, அத்தைப் பொண்ணு மாதிரி. ஏற்கனவே உறவில் இருக்கிறோம். நட்பில் இருக்கிறோம் என்று பதில் அளித்தார்.
மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறி வந்த டாக்டர் ராமதாஸ், தற்போது அ.தி.மு.க.வுடன் சேர்ந்து இருக்கிறார். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல என்று அவர் முடிவு செய்து இருக்கலாம் என்றும் கூறினார்.
முன்னதாக கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் தங்களது சமூகநீதி கொள்கைக்கு எதிரான கூட்டணியில் சேர்ந்து உள்ளது. இது ஒரு வரலாற்றுப்பிழை என்று கூறினார்.
மேலும் தொகுதி பங்கீடு பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி எப்படி செயல்படப்போகிறது என்பதை சென்னையில் நாளை (அதாவது இன்று) அறிவிப்போம் என்றார்.