

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், விவசாய அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைத்து உள்ளது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு விவசாயிகள் மீண்டும் நிபந்தனை விதித்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு கடைசியாக அனுப்பிய கடிதத்தில் புதிதாக ஒன்றுமில்லை. மாறாக விவசாயிகளுக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் அதில் உருவாக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். ஆனால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டுமென்றால், அதற்கான நிகழ்ச்சி நிரலில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்த ஆலோசனையும் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாய அமைப்புகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, அரசிடம் முறைப்படி தெரிவிப்பார்கள் என போராட்டக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.