

புதுடெல்லி,
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு, இடது கை உணர்ச்சியற்றதாகவும் இருந்ததால் ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்ததால், டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்த ரத்த கட்டியை அகற்றினர். ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசம் அடைந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார். பிரணாப் முகர்ஜி நேற்று காலை நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார்.
இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்று மருத்துவமனை இன்று காலை தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து செயற்கை சுவசாச கருவியின் உதவியுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.