பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு; காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் நடக்கிறது

பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் மாநாடு, அடுத்த மாதம் காணொலி காட்சி மூலம் நடக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு; காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் நடக்கிறது
Published on

புதுடெல்லி,

உளவுத்துறை ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதில், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுடன் விவாதம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாடு, அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடக்கிறது. வரலாற்றில் முதல்முறையாக காணொலி காட்சி மூலம் நடக்கிறது. இது, 2 நாள் மாநாடு ஆகும். பல்வேறு அமர்வுகளாக நடக்கிறது.

மாநில, யூனியன் பிரதேசங்களின் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.க்கள் சுமார் 250 பேர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். அவரவர் தலைமையகத்தில் இருந்தே கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டுக்கு, பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

கொரோனா மற்றும் பேரிடரின்போது போலீசார் ஆற்றிய பங்கு, இணைய பயங்கரவாதம், இளைஞர்களை மூளைச்சலவை செய்வது, காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

வன்முறையை தூண்டி விடுவதில் சமூக வலைத்தளங்களின் பங்கு, கருப்பு பணம் மற்றும் போதைப்பொருட்களை ஒழிப்பது ஆகியவை பற்றியும் பேசப்படுகிறது. முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அமலாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

பேரிடர் காலங்களில் போலீசாரின் செயல்திறனை இன்னும் அதிகரிப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. கொரோனாவை கையாண்டது பற்றியும், ஊரடங்கின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவியது பற்றியும் தங்கள் அனுபவங்களை போலீஸ் அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள்.

மேலும், கொரோனாவை எதிர்கொண்டபடி போலீசார் ஆற்றிய சேவையை பிரதமர் மோடி பாராட்டுவார் என்று தெரிகிறது. இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com