மூன்று வார அவகாசம் அளித்து சட்டப்பேரவையை கூட்டலாம்: ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா

சட்டப்பேரவை கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டலாம் என ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மூன்று வார அவகாசம் அளித்து சட்டப்பேரவையை கூட்டலாம்: ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
Published on

ஜெய்பூர்,


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கைக்கு ஆளுநர் இசைவு கொடுக்கவில்லை. இதனால், ராஜஸ்தான் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. இந்த நிலையில், அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட பரிந்துரைத்த அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல் கொடுத்துள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த கூடாது என்பது தனது நோக்கம் அல்ல என்றும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா விதித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தான் பிரதமர் மோடியுடன் பேசியதாகவும் ஆளுநரின் நடவடிக்கை குறித்து அவரிடம் முறையிட்டதாகவும் கூறியிருந்த நிலையில், ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட ஒப்புதல் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com