பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவ.8 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங். முடிவு

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவ.8 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங். முடிவு
Published on

புதுடெல்லி,

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் அழித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கிய அன்றைய தினம் (நவம்பர் 8) போராட்டம் நடத்துவார்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் பாண்டே தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், கருப்பு பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள நோட்டுகளை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டது எனவும், ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முன்சொன்ன எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. நவம்பர் 2016 ஆம்-ல் இருந்ததை விட தற்போது அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ளது என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த போராட்டத்தில் கலந்து கொள்வாரா? என்று செய்தியாளர்கள் மனிஷ் திவாரியிடம் கேள்வி எழுப்பிய போது, அனைத்து தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com