விவசாயிகள் அறிவித்துள்ள ‘பாரத் பந்த்’ ; காங்கிரஸ் ஆதரவு

டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் அறிவித்துள்ள ‘பாரத் பந்த்’ ; காங்கிரஸ் ஆதரவு
Published on

புதுடெல்லி:

நாட்டில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளான் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்று தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பேராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லாப் கூறுகையில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களால் செப்டம்பர் 27ம் தேதி அமைதியான முறையில் நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள். கடந்த 9 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க போவதாக பிரதமர் மோடி கூறியிருந்தது பொய்யானது. 2012-2013ம் ஆண்டுகளில் விவசாயத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைத்த வருமானத்தை விட 2018-20219ம் ஆண்டுகளில் கிடைத்த வருவாய் கணிசமாக குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு விவசாயி சராசரியாக ஒரு நாளைக்கு 27 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாக இந்திய அரசின் நிலை மதிப்பீட்டு ஆய்வு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் விவசாய துறை நிரந்தர பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக விவசாயத் துறை மீது வரி விதித்துள்ள ஒரே அரசு தற்போதைய பா.ஜ.க. அரசு மட்டுமே. விவசாயத் துறை மீது ஜி.எஸ்.டி. மூலமாக அரசாங்கம் வரி வசூலிக்கின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கீழ் விவசாயிகள் கொண்டு வரப்படுவார்கள் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் , இந்த 3 வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஒரு குழுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com